×

மணப்பாறை அருகே குழாய் உடைப்பில் கசிந்து குட்டைபோல் தேங்கி கிடக்கும் குடிநீரை பயன்படுத்தும் மக்கள்

மணப்பாறை, மே 29:  மணப்பாறை அருகே குழாய் உடைப்பில் கசிந்து குட்டைபோல் தேங்கி கிடக்கும் காவிரி குடிநீரை, தெரு நாய்களும் குடித்து, குளித்த பின்னர் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மணப்பாறை மற்றும் வையம்பட்டி-மருங்காபுரி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய் மூலம் மணப்பாறை பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாய் செல்லும் வழியில் பல இடங்களில் ஏர் வால்வுகளும், சிறிய அளவிலான தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மணப்பாறை குளித்தலை ரோட்டில் உள்ள உடையாப்பட்டி பிரிவு ரோடு, பொத்த மேட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஏர் வால்வுகள் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. ஏர் வால்வு உடைந்து தேங்கி நிற்கும் நீரை பொதுமக்கள் குடிக்கவும், கால்நடைகளுக்கும் அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தேங்கியுள்ள நீரில் தெரு நாய்களும் குடித்து, குளித்து செல்கின்றன. ஆனால், கடுமையான வறட்சியின் காரணமாக அத்தண்ணீரையே பொதுமக்கள் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகர், திருச்சி ரோடு, செவலூர் பனந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் இந்த அசுத்த நீரை பிடித்து வடிகட்டி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறை வரும் காவிரி குடிநீர் குடும்பத்திற்கு 3 குடம் மட்டும் கிடைப்பதால் வீட்டு தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் இந்த நீரை பயன்படுத்துவதாகவும், இந்த இடத்திலேயே மினி தொட்டியுடன் பைப் அமைத்து கொடுத்து ஓரளவாவது தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும் என கூறுகின்றனர்.

அத்துடன் குளம் போல் தேங்கும் இந்த கழிவுநீர் நிரம்பி மீண்டும் குடிநீர் குழாயில் கலந்துவிடுகிறது. இந்த அசுத்த நீரே பல்வேறு கிராமங்களுக்கும் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், காவிரி குடிநீர் குழாய் பாதையில் உள்ள உடைந்த ஏர் வால்வுகளை உடனுக்குடன் சரி செய்து குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : mantle ,pipe break ,
× RELATED விராலிமலை அருகே காவிரி குடிநீர்...